126 ரன் விளாசினார் ரகானே: இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு
கொழும்பு: இந்திய அணியுடனான 2வது டெஸ்டில், 413 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன் எடுத்துள்ளது. அபாரமாக விளையாடிய இந்திய வீரர் அஜிங்க்யா ரகானே 126 ரன் விளாசி அசத்தினார். கொழும்பு, பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 393 ரன் குவித்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 306 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து, 87 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன் எடுத்திருந்தது. விஜய் 39 ரன், ரகானே 28 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். அபாரமாக விளையாடிய இருவரும் 2வது விக்கெட்டுக்கு 140 ரன் சேர்த்தனர். விஜய் 82 ரன் எடுத்து (133 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் கோஹ்லி 10 ரன்னில் வெளியேற, ரகானே - ரோகித் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 85 ரன் சேர்த்தது. பொறுப்புடன் விளையாடிய ரகானே தனது 4வது சதத்தை பூர்த்தி செய்தார். ரோகித் 34 ரன், ரகானே 126 ரன் எடுத்து (243 பந்து, 10 பவுண்டரி) ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் விரைவாக ரன் குவிக்கும் முயற்சியில் ஆட்டமிழந்தனர்.இந்தியா 91 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 325 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. சாஹா 13, உமேஷ் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை பந்துவீச்சில் தம்மிகா, தரிண்டு தலா 4 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து, 413 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 4ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன் எடுத்துள்ளது.கவுஷல் சில்வா 1 ரன்னில் வெளியேற, கடைசி முறையாக களமிறங்கிய சங்கக்கரா 18 ரன் எடுத்து (18 பந்து, 3 பவுண்டரி) அஷ்வின் சுழலில் விஜயிடம் கேட்ச் கொடுத்து விடை பெற்றார். கருணரத்னே 25, கேப்டன் மேத்யூஸ் 23 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 8 விக்கெட் இருக்க, இலங்கை அணி வெற்றிக்கு இன்னும் 341 ரன் தேவை என்ற பரபரப்பான நிலையில், இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=163166
via http://j.mp/tamil_news