அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகளை அரசு விற்பதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை,
பாலின் அளவு குறைவாக உள்ள ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–நுகர்வோர் அதிருப்தி
அளவு குறைந்த பால் ஆவின் பால் பாக்கெட்டுகளில் வினியோகிக்கப்படுகிறது என்று வெளிவந்துள்ள செய்தி வருத்தமளிப்பதாக இருக்கிறது. ½ லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டில் 500 மில்லி லிட்டர் பால் அளவு இருப்பதற்குப் பதில் 400 மில்லி லிட்டர்தான் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு ஆவின் பால் நுகர்வோர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே ஆவின் பால் தேவைப்படும் மக்களுக்குப் போதிய அளவில் ஆவின் பால் அட்டைகள் வழங்கப்படுவதில்லை என்ற புகார் இருக்கிறது. இந்நிலையில், பாலின் அளவையும் குறைவாக கொடுப்பது அவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் ஆவின் நிர்வாகம் செயல்படும் விதம் வினோதமாக இருக்கிறது.தரமற்ற பிளாஸ்டிக் பாக்கெட்டுகள்
முதலில் ஆவின் பாலில் கலப்படம் செய்தார்கள். பிறகு பால் தயாரிப்பாளர்களிடமிருந்து முழு பாலையும் கொள்முதல் செய்ய மறுத்தார்கள். இப்போது பாக்கெட் அளவைவிட குறைந்த அளவு பால் நிரப்பி ஆவின் பால் விற்பனை செய்கிறார்கள்.
இவை எல்லாவற்றிற்கும் மேல் இதே ஆவின் நிர்வாகம் தான் பாலின் விலையை லிட்டருக்கு 16 ரூபாய்க்கு மேல் செங்குத்தாக உயர்த்தி வாடிக்கையாளர்களை வதைத்தது என்பதும் இங்கே நினைவு கூறத்தக்கது. இதுமட்டுமின்றி, ஆவின் பால் பாக்கெட்டுகள் தரமற்ற பிளாஸ்டிக் மூலம் தயார் செய்யப்படுகிறது என்ற புகாரும் வந்திருக்கிறது.நீதி வழங்கவேண்டும்
இப்படி குறைவான பால், அதிக விலை என்றெல்லாம் ஒரு ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்கி, ஆவின் பால் வாங்கும் மக்களை தனியார் பால் வாங்கும் நிலைமைக்கு அரசே தள்ளுவது மட்டுமின்றி, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆவின் நிறுவனத்தைவிட தனியார் பால் நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்கு வழிவகுக்கும் வகையில் அ.தி.மு.க. அரசு செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஆகவே அளவு குறைந்த பால் கொடுக்கப்படுகிறது என்ற புகாரை விசாரித்து வாடிக்கையாளர்களுக்கு நீதி வழங்கவேண்டும் என்று ஆவின் நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன். ஆவின் பால் அடைக்க கொள்முதல் செய்யப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் தரமுடன் இருக்கிறதா? என்பதை அறிய உரிய விசாரணை நடத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.தரமான பால் ஆவின் பால் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதையும், அதுமட்டுமின்றி கைக்குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் அனைவருக்குமே ஆவின் பால் மிகவும் பாதுகாப்பானது என்பதையும் அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு நம்பிக்கைத்துரோகம் செய்யாமல், தரமான அதேநேரத்தில் சரியான அளவில் ஆவின் பால் கிடைப்பதை அ.தி.மு.க. அரசு உறுதிசெய்யவேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Link: www.DailyThanthi.com/News/State/2015/08/24052057/Government-of-packets-of-milk-sell-less-oil-Condemnation.vpf
via http://j.mp/tamil_news